ஈரோடு கிழக்கு தொகுதியில்விருப்பமனுக்கள் பெற்ற பிறகு அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் விருப்ப மனுக்கள் பெற்ற பிறகு அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிமனை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைதியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளரை அறிவிக்க உள்ளார்.
திருப்பு முனை
மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும். அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972-ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த தேர்தலைப்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம்தான். நாங்களும் பணிக்குழு அமைத்து தேர்தல் பணியை தொடங்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள், மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்து இருப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.