ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ரூ.100 கோடி பொருட்கள் தேக்கம்


ஈரோட்டில், கூலி உயர்வு வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ரூ.100 கோடி பொருட்கள் தேக்கம்
x

கூலி உயர்வு வழங்கக்கோரி ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

ஈரோடு

கூலி உயர்வு வழங்கக்கோரி ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

கூலி உயர்வு

ஈரோடு மாநகர் பகுதியில் மஞ்சள் கிடங்குகள், ஜவுளி நிறுவனங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கான சரக்கு லாரி போக்குவரத்து நிறுவனங்கள், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உள்பட சரக்குகளை கையாளும் வகையில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சரக்குகளை லாரிகளில் ஏற்றி, இறக்கும் பணியில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் சார்பில் கூலி நிர்ணயிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலியை உயர்த்தி ஒப்பந்தம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமலும், புதிய ஒப்பந்தம் போடப்படாமலும் உள்ளதாகக்கூறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டம்

இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியை, 41 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை பேசி முடிக்காத டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெகுலர் லாரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு 8 மணிக்கு மேல் லாரிகளில் பாரம் ஏற்றி, இறக்கினால் சாப்பாட்டுக்கு ரூ.75 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி ஈரோடு பூங்கா சாலையில் உள்ள ஸ்டார் தியேட்டர் அருகே 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ரூ.100 கோடி

இந்த போராட்டத்துக்கு தமிழக பொது தொழிலாளர்கள் மத்திய சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, சி.ஐ.டி.யு. தலைவர் தங்கவேலு, தொழில் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆறுமுகம், விஜயகுமார், ராஜூ, ரவிசந்திரன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று அனைத்து வகையான சரக்குகளும் லாரி, கன்டெய்னர், வேன்களில் ஏற்றி, இறக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ஈரோட்டுக்கு நேரடியாக வரும் பிற மாநில லாரிகள் மற்றும் ஈரோட்டில் சரக்கை இறக்கிவிட்டு பிற ஊர்களுக்கு செல்லும் லாரிகளும், சரக்கை ஏற்றி, இறக்க முடியாமல் காத்து கிடக்கின்றன. இதன் காரணமாக ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளி, மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story