ஈரோட்டில், விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


ஈரோட்டில், விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x

ஈரோட்டில், விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில், விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகளில் வரும் ஜவுளி பண்டல்களை ஏற்றி, இறக்கும் தொழிலில் 500-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இங்குள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஜவுளி பண்டல்களை இறக்காமல், பிற பகுதி சுமை தொழிலாளர்களை அழைத்து வந்து, ஜவுளி பண்டல்களை இறக்க விசைத்தறி உரிமையாளர்கள் முற்பட்டனர். இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறும்போது, 'ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வெளி ஆட்களை அழைத்து வந்து வேலை செய்தால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே வழக்கம்போல் நாங்கள் ஜவுளி பண்டல்களை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் கூறும்போது, 'எங்கள் விருப்பபடி யாரை வைத்து வேண்டுமானாலும் ஜவுளி பண்டல்களை இறக்கி கொள்ளலாம் என கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. அதன்படி இறக்க உள்ளோம்' என்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. பின்னர், போலீசார் இரு தரப்பினரும் ஈரோடு ஆர்.டி.ஓ.விடம் இந்த பிரச்சினைக்கு மனு அளித்து தீர்வு காணுங்கள் என அறிவுறுத்தினர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி இல்லாமல்...

பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் முன்னிலையில் தற்காலிக உடன்பாடு எடுக்கப்பட்டது. அதில், இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை ஈரோடு, லக்காபுரம், சித்தோடு பகுதியில் இருந்து வரும் பண்டல்களை இறக்கி, அதனை கணக்கு எழுதி வைத்து கூலி பெறாமல் இருப்பது, பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்ட பின் கூலியை பெற்று கொள்வது என்றும், மேற்கண்ட 3 பகுதியை தவிர வேறு பகுதிகளில் இருந்து வரும் பண்டல்களுக்கு வழக்கம் போல் சுமை தொழிலாளர்கள் கூலியை பெற்று கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்களே நேற்று மீண்டும் வழக்கம் போல் ஜவுளி பண்டல்களை இறக்கினர்.


Related Tags :
Next Story