ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்புதிருப்பூர் தொழில் அதிபர் தற்கொலை
ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இறந்து கிடந்த வாலிபர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்பு நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இறந்து கிடந்த இடத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
தொழிலில் நஷ்டம்
பிணமாக கிடந்தவர் திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 37). இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துகிருஷ்ணன் திருப்பூரில் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பனியன் நிறுவனத்தை மூடிவிட்டார்.
அதன் பின்னர் கடந்த 6 மாதங்களாக திருப்பூரில் உள்ள மற்றொரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக அவருக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக முத்துகிருஷ்ணன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் இரவில் சுற்றித்திரிந்துள்ளார். அவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்தார்.
அப்போது அவர் தான் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் வெகு நேரமாக ஒருவர் அந்த பகுதியில் படுத்துக்கிடந்ததால் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் தொழில் அதிபர் ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.