சின்னமனூர் அருகே பள்ளி முன்புதலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியல்
சின்னமனூர் அருகே பள்ளி முன்பு தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம்
சின்னமனூர் அருகே தென்பழனி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவை தயார் செய்வதற்காக வேறு ஊரை சேர்ந்த ஒருவரை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் எங்களுக்கு உணவு தயார் செய்யும் வேலை செய்ய விருப்பம் உள்ள நிலையில் வேறு ஊரை சேர்ந்தவரை எப்படி நியமனம் செய்யலாம் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமை ஆசிரியருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன்பு செல்லும் சின்னமனூர்-மேகமலை மாநில நெடுஞ்சாலைக்கு நேற்று திரண்டு வந்தனர்.
பெற்றோர் மறியல்
பின்னர் அவர்கள் அந்த சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓடைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக மேகமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.