கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கூலி உயர்வு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூலி உயர்வு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அவற்றை வாங்கிய கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தினக்கூலியாக ரூ.750 வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அதில் சிலர் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
கோவிலை அகற்றக்கூடாது
பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மிகக்குறைவாகவே கூலி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாவட்டத்தில் அதிகளவில் கொடுத்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு மாதம் ரூ.750 கூலியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கோல்டுவின்ஸ் பகுதியில் ஹவுசிங் யூனிட் வழியாக செல்லும் பாதையில் சுயம்பு தம்பிரான் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலை அகற்ற முயற்சி நடந்து வருகிறது. எனவே இதை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, தொடர்ந்து கோவில் அங்கேயே செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
டாஸ்மாக் கடை
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஏழூர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஏழூர் பிரிவில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் இருந்து 20 மீட்டர் தூரம் நிலம் கையகப்படுத்த உள்ளனர். இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என கூறியிருந்தது.
மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், இங்கு 10 ஆண்டாக டாஸ்மாக் மதுக்கடை இல்லை. ஆனால் தற்போது இங்கு மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் அருகில் பள்ளி, தாசில்தார் அலுவலகம் உள்பட பொதுமக்கள் பலர் வந்து செல்லும் இடங்கள் உள்ளன. எனவே இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைப்பை கைவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






