கலெக்டர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கேட்டு கிராமமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கேட்டு கிராமமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
x

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கேட்டு கிராமமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

போராட்டம் நடத்த முயற்சி

கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமம், சுப்பன் ஆசாரி களத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி உள்ளனர்.மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சுப்பன் ஆசாரி களத்தை சேர்ந்த கிராமமக்கள், பள்ளி மாணவ, மாணவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் சுப்பன் ஆசாரி களத்தில் உடனடியாக அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறி, கையில் பதாகையுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆண்கள் 25 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். மேலும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story