கடைகள் முன்பு குப்பைகளை குவித்து தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு
கடைகள் முன்பு குப்பைகளை குவித்து தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் நகரில் அரசு அனுமதியுடன் 2 நிரந்தர பட்டாசு கடைகள் இருந்தன. அந்த கடைகளில் பாதுகாப்பு உபகரணங்களாக வாளிகளில் மணல், பெரிய தொட்டிகளில் நீர் போன்றவை இருந்தன. ஆனால் தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருந்த ஏராளமான பட்டாசு கடைகளில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. அவை மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சில பட்டாசு கடைகள் டீக்கடைகளுக்கு அருகிலும் இருந்தன.
இந்நிலையில் தீபாவளியான நேற்று முன்தினம் பட்டாசு கடைகளை மூடிச்சென்றபோது பல இடங்களில் தங்கள் கடைகளில் சேர்ந்த குப்பைகளை சாலையில் குவித்து தீ வைத்துவிட்டனர். அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளையும் அதில் போட்டு சென்றனர். இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறியபோது, சாலைகளில் சென்றவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மிகவும் அச்சத்துடனேயே சென்றனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விபத்துகள் ஏற்படவில்லை.
ஆனால் அளவுக்கு அதிகமாக பலர் குப்பைகளை கொளுத்தியதாலும், அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பல மணி நேரம் பட்டாசு வெடித்ததாலும் நகரமே புகை மண்டலமாக பனிபொழிவது போன்று காட்சி அளித்தது.