தேனி கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள், செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர். சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதன்படி, தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், நாட்டு செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் லாசர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் நாட்டு செங்கல் சூளைகளுக்கு எடுக்கும் மண்ணுக்கு உத்தேசித்துள்ள தண்டத்தொகையை ரத்து செய்ய வேண்டும். நாட்டு செங்கல் சூளைகளுக்கு இலவசமாக மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை தொடர்பான மனு கொடுத்தனர்.
ஓய்வூதியர்கள்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்புராயர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாநில துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்அமைதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இதேபோல், கம்பத்தில் வ.உ.சி. சிலை அமைக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.