கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநவமி விழா
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சன்னதியில் இருந்து கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
திருக்கல்யாண சேவை
பின்னர் தீட்சிதர்கள் கொடிக்கு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண சேவையில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.
தேரோட்டம்
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்திலும் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.