அரசு விளையாட்டு விடுதிகளில்மாணவ -மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட விளையாட்டு போட்டி
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ -மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பெருந்துறையில் நடந்தது.
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ -மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பெருந்துறையில் நடந்தது.
விளையாட்டு விடுதியில் சேர்க்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டு விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த சேர்க்கைக்காக www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து இருந்த 70 மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கவுன்சிலிங்
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் முன்னிலை வகித்தார்.
தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். மாநில போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு கவுன்சிலிங் மூலம் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.