உளுந்து பயரில் மஞ்சள் தேமல் நோய் : வேளாண்மை அதிகாரி விளக்கம்


உளுந்து பயரில்   மஞ்சள் தேமல் நோய் :  வேளாண்மை அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்து பயரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து பயரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உளுந்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் விவசாயிகள் நஞ்சை தரிசு உளுந்து பயிரிட்டு உள்ளனர். இந்த பயிர் தற்போது நன்கு வளர்ந்து பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் சில பகுதிகளில் உள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்த நோய் தாக்குதல் அதிகரித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நோய் வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் பரவுகிறது. இந்த நோய் தாக்குதலால் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, புதிதாக தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுக்கள் தென்படும். நோய் தாக்கப்பட்ட பயிர்கள், குட்டை வளர்ச்சியுடன் காலம் தாழ்த்தி முதிர்ச்சி அடைதல், மிகக் குறைந்த அளவு பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்தல் ஆகியவை முக்கியமான அறிகுறிகளாக காணப்படுகிறது.

கட்டுப்படுத்தலாம்

இந்த நோயில் இருந்து உளுந்து பயிரை காப்பாற்ற விவசாயிகள் நோய் பாதித்த வயலில் இருந்து பெறப்படும் விதைகளை மறுவிதைப்புக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி கூடிய வம்பன் 8 ரகத்தை பயிரிடுதல் வேண்டும். வரப்போர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தை பயிரிட வேண்டும். உளுந்து மஞ்சள்சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைதல் வேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஒரு எக்டருக்கு 12 எண்ணம் அமைக்க வேண்டும். எக்டேருக்கு இம்டாகுலோபிரிட் 17.8 எஸ்.எல். 200 மில்லி அல்லது டைமீத்தோயேட் 30 இ.சி 500 மில்லி அல்லது தையோமீதாக்ஸம் 75 டபிள்யூ.எஸ். 100 கிராம் அளவில் தெளித்தல் வேண்டும். தேவைப்பட்டால் 15 நாள் கழித்து மற்றொரு முறை இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

எனவே, விவசாயிகள் மேற்கூறியவற்றைக் கடைபிடித்து உளுந்து பயிரில் மஞ்சள்நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story