கூடலூரில்விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைப்பு:நகராட்சி ஆணையரிடம், விவசாயிகள் மனு
கூடலூரில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கூடலூர் நகராட்சி ஆணையர் காஞ்சனாவிடம், கூடலூர் பகுதி விவசாயிகள் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகிறோம் ஒட்டாண்குளம், கப்பா மடை, சாமிவாய்க்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த பல வருடங்களாக கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான ராஜா கிணறு பாதை வழியாக விவசாய நிலத்திற்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பாதையை அடைத்து விட்டனர்.
இதன் காரணமாக விவசாயிகளால் தங்களது விளைநிலங்களுக்கு இடு பொருட்கள் மற்றும் உழவு பணி செய்ய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நீண்டதூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு அடைக்கப்பட்டுள்ள இந்த பாதையை மீண்டும் திறந்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட ஆணையர் தங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.