தேனியில்அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி:இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
தேனியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகில் தனியார் மைதானத்தில், செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கின்றன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்தும், அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள், ஆய்வு பணிகள் குறித்தும் இதில் புகைப்படங்கள் இடம்பெறும்.
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த கண்காட்சியை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.