தேனியில்வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களால், வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும், அவதூறுகள் பேசப்பட்டும் வருவதாக கூறியும், பெரியகுளம் தாசில்தார் மீது அவதூறு பேனர் வைத்து போராட்டம் செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பெரியகுளம் தாசில்தார் காதர்செரீப் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அவர்களின் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் வடிவேல் நன்றி கூறினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் கொடுத்த மனுவில், 'மாவட்டத்தில் சமீப காலமாக தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்களை மிரட்டும் செயல்பாட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதிலும் ஒத்துழைப்பு இன்மையால் வட்ட, மாவட்ட நிர்வாகத்தால் சிரமமாக உள்ளது. எனவே, இதுகுறித்து துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.