தேனியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி:செங்கோட்டை நகராட்சி ஊழியர் கைது


தேனியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி:செங்கோட்டை நகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி செய்த செங்கோட்டை நகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

அரசு வேலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பவளம்நகரை சேர்ந்தவர் துரைபாண்டியன் (வயது 50). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு அப்பிப்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் ஆனார். அவர் தனது நண்பர்கள் என்று ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி சீலகாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இருளன் (43), மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

இருளன், தவமணி ஆகியோருக்கு அரசியல்வாதிகளையும், அரசு உயர் அதிகாரிகளையும் தெரியும் என்றும், அவர்கள் பலருக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார். எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பணம் கொடுத்தால் அதற்கு ஏற்ப அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதை நம்பி எனது தம்பிக்கும், உறவினர்கள் பலருக்கும் வேலை வாங்கி கொடுப்பதற்காக இருளன் உள்பட 3 பேரிடமும் ரூ.87 லட்சத்து 15 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா இந்த மோசடி குறித்து இருளன், தவமணி, ஜெயக்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து இருளனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், இருளன் தங்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக கூறி 10-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

ரூ.1.15 கோடி மோசடி

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'கைதான இருளன் அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், டிரைவர், அலுவலக உதவியாளர், எலக்ட்ரீசியன் போன்ற பணிகள் வாங்கித் தருவதாக 45 பேரிடம் ரூ.1 கோடியே 15 லட்சம் மோசடி செய்துள்ளதாக இதுவரை புகார்கள் வந்துள்ளன. மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் புகார் கொடுக்கலாம்.

இருளன் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கிருந்து இடமாறுதலாகி தற்போது தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.


Related Tags :
Next Story