தேனியில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேரிடம் கந்து வட்டி கொடுமை


தேனியில்  முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேரிடம்  கந்து வட்டி கொடுமை
x

தேனியில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேனி போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்

தேனி

கந்துவட்டி கொடுமை

தேனி பாரஸ்ட்ரோடு 5-வது தெருவை சேர்ந்த விஜயகுமார் மனைவி சவுந்தரவள்ளி (வயது 59). இவர், வீட்டில் வைத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த நாகமணி (67), அவருடைய மனைவி அமுதா (57) ஆகியோர் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டு வரை ரூ.14 லட்சத்து 91 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுக்கும் போது வட்டித்தொகை ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 400 பிடித்துக் கொண்டனர். இதற்காக சவுந்தரவள்ளி சில வங்கிக் காசோலைகளை ஈடாக கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், வாங்கிய கடனுக்கு வட்டியுடன் மொத்தம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் கட்டி முடித்த நிலையில், மேலும் ரூ.12½ லட்சம் வட்டியாக கட்ட வேண்டும் என்று கூறி சவுந்தரவள்ளியை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்கள் சவுந்தரவள்ளியின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி மிரட்டியுள்ளனர். அத்துடன் நாகமணியின் மகள் மாலினி, அல்லிநகரத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோரும் நாகமணியுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் சவுந்தரவள்ளி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் நாகமணி, அமுதா, நாகராஜ், மாலினி ஆகிய 4 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் கவுன்சிலர்

இதேபோல் தேனி பாரஸ்ட்ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் ஜெயமணி (51). அ.ம.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இவர் தேனி அல்லிநகரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். அவர் போடியை சேர்ந்த சுசீலா (65) என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய நிலையில் சுசீலா மற்றும் சிலர், ஜெயமணியின் வீட்டுக்கு சென்று மேலும் வட்டி செலுத்துமாறு கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜெயமணி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த சம்பவம் குறித்து சுசீலா, கம்பத்தை சேர்ந்த பிரபாவதி உள்பட 6 பேர் மீது கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story