ஓசூரில் பா.ஜனதாவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு
ஓசூர்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் பா.ஜனதா மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில், மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், துணைத்தலைவர் முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், விஜயகுமார், அன்பரசன், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி செய்ய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டியுள்ள கூட்டத்திற்கு பெங்களூரு சென்றுள்ளார். கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் பங்கீட்டை வழங்காதது குறித்து பேசாமலும், மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு முனைப்புடன் இருப்பதை கண்டிக்க தவறி முதல்-அமைச்சர் பெங்களூரு சென்றிருப்பது வருந்தத்தக்கது. கர்நாடக அணை நீரை தமிழகத்திற்கு தொய்வின்றி வழங்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில அரசுகளின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இல்லை. தமிழக மக்களின் நலனுக்காக எந்தவித போராட்டத்தை சந்திக்கவும் பா.ஜனதா தயங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.