ஓசூரில், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓசூர்:
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கண்டிப்பது மற்றும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி மத்திய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில், ஓசூரில் நேற்று எம்.ஜி.ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.லகுமய்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், தளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பூதட்டியப்பா, பழனி உள்பட கட்சி நிர்வாகிகள், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.