ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

வெண்ணந்தூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 984 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மீது பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்ந்து பொய்யான புகார்களையும், பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் வந்ததை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் மாணவி பெயர்களை பயன்படுத்தி தலைமை ஆசிரியர் தொடர்ந்து பொய்யான புகார்களை அனுப்பி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியையை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியையை பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மீது பொய்யான புகார்களை அனுப்பி, மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், பணிசெய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தலைமை ஆசிரியையை பள்ளியில் இருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story