உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்


ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கேட்டை பூட்டி விட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

ராசிபுரம்

உழவர் சந்தை

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தைக்கு மெட்டாலா, முள்ளுக்குறிச்சி கார்கூடல்பட்டி, உரம்பு, மூலப்பள்ளிப்பட்டி, நாரைக்கிணறு, புதுப்பட்டி, ஒடுவன் குறிச்சி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளை தினந்தோறும் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தை நடைபெறும் இடத்திற்கு 300 மீட்டருக்குள் எந்த தனியார் காய்கறி கடைகளும் அமைக்க கூடாது என விதி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் உழவர் சந்தையின் வெளியே தனியார் காய்கறி கடைகளை அமைக்க அனுமதி வழங்கி அதற்கான கட்டணத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் எதிர்ப்பு

உழவர் சந்தைக்கு வெளியே சிறு வியாபாரிகள் காய்கறி கடைகளை வைத்து வியாபாரம் செய்வதற்கு உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் தங்களின் வியாபாரம் பாதிப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் பஸ் நிலைய பகுதியில் உழவர் சந்தைக்கு வெளியே செயல்பட்டு வந்த சிறு காய்கறி கடைகள் இருக்கும் பகுதியில் தற்போது நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் கடைகளை கட்டுவதற்காக குழி தோண்டி இருக்கிறது. இதையொட்டி நகராட்சி நிர்வாகம் வாரச்சந்தை நடைபெறும் நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் உழவர் சந்தை நடக்கும் பகுதியில் செயல்பட அனுமதி அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வந்த சிறு காய்கறி கடைக்காரர்கள் உழவர் சந்தைக்குள் கடைகளை வைக்க முயற்சித்தனர். இதற்கு உழவர் சந்தை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

உழவர் சந்தைக்குள் வார சந்தை வியாபாரிகள் கடை வைக்க அனுமதிக்க கூடாது என்றும், காலை 9 மணி வரை உழவர் சந்தைக்கு வெளியே காய்கறி கடைகளை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தும் உழவர் சந்தையின் மெயின் கேட்டை பூட்டி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உழவர் சந்தை விவசாயிகளுக்கும், வாரச்சந்தை வியாபாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை முற்றி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் முற்றுகை

இது பற்றி தகவல் அறிந்து வந்்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்கள் வாரச்சந்தை வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி அவர்களை உழவர் சந்தை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாரச்சந்தை வியாபாரிகளிடம் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு சென்றனர்.

இது பற்றி கேள்விப்பட்டதும் வேளாண்மை இணை இயக்குனர் நாசர் உழவர் சந்தைக்கு நேரில் வந்திருந்து உழவர் சந்தை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் உழவர் சந்தை விவசாயிகளிடம் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

1 More update

Next Story