பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
திருப்புவனம்
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள தேரடி வீதி முதல் போலீஸ் லயன்தெரு மதுரை-மண்டபம் சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ஜி.கே.வாசன் எம்.பி. தனது வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.40 லட்சம் வழங்கியுள்ளார். அந்த நிதிக்கான நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த பணிக்கு டெண்டர் விடாமல் காலம் கடத்தும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து 5-வது வார்டு கவுன்சிலர் பாரத்ராஜா பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அதுசமயம் செயல் அலுவலர் சிவகங்கைக்கு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் செயல் அலுவலர் இங்கு வரவேண்டும் எனக்கூறி 2 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செயல் அலுவலர் செல்போனில் தெரிவித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், பேரூராட்சியின் மூலம் ஒப்பந்த புள்ளி கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.