10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்லையில் ஜூன் மாதத்தில் 104 டிகிரி வெயில் பதிவானது
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்லையில் ஜூன் மாதத்தில் 104 டிகிரி வெயில் பதிவானது.
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்லையில் ஜூன் மாதத்தில் 104 டிகிரி வெயில் பதிவானது.
வெயில் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் ஆற்றுப்பாசனம் தவிர மானாவாரி விவசாயிகள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். இந்த நிலையில் கோடை காலமும், அதில் அதிக வெயில் தாக்கம் நிகழும் அக்னி நட்சத்திர காலமும் கடந்த மே மாதத்துடன் முடிந்து விட்டது. அப்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் வழக்கம் போல் தென் மேற்கு பருவ காற்றும், தென்மேற்கு பருவமழையும் பெய்யக்கூடும் என்று பொது மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
104 டிகிரி பதிவானது
தென்மேற்கு பருவ காற்று தாமதமாக தொடங்கியது. ஆனால் தென்மேற்கு பருவமழையை காணவில்லை. மாறாக கோடை வெயிலை விட கடுமையான வெயில் தாக்கம் நிலவுகிறது.
தமிழ் ஆனி மாதம் பிறந்து விட்டாலே கேரள மாநிலத்திலும், அதையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து, நீர் நிலையில் நீர்மட்டம் உயரும். ஆனால் நேற்று ஆனி மாதம் பிறந்துவிட்ட நிலையிலும் வெயில் தாக்கம் குறையவில்லை.
நெல்லையில் நேற்று 104.1 டிகிரி வெயில் பதிவானது. பகல் நேரத்தில் வெப்ப காற்றும் வீசியது. இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாடவும், வாகனங்களில் பயணிக்கவும் சிரமப்பட்டனா்.
10 ஆண்டுகளில்...
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகள் வரலாற்றில் மே மாதத்துடன் வெயில் தாக்கம் முடிந்து விடும். ஜூன் மாதம் 104 டிகிரி வெயில் பதிவானதில்லை. இதுதான் முதன் முறை ஆகும். மேலும் இந்த ஆண்டில் நேற்று 2-வது முறையாக அதிகபட்ச வெப்ப நிலையை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே இந்த நிலை மாறும். அதுவரை வெப்ப காற்று வீசும்'' என்றனர்.