கடமலைக்குண்டு பகுதியில்கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு
கடமலைக்குண்டு பகுதியில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, வாலிப்பாறை, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் கொட்டை முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் மரங்களுக்கு மருந்து தெளித்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு, குமணன்தொழு, வாலிப்பாறை பகுதிகளில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் காய்ந்து உதிர்ந்து விடுகிறது. விவசாயிகள் மருந்துகள் தெளித்தும் கருகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் நோய் பாதிப்பு அடுத்தடுத்த மரங்களுக்கு வேகமாக பரவி வருகிறது. கருகல் நோய் பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருகல் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.