கடமலைக்குண்டுவில்சாலை பள்ளத்தால் தொடர் விபத்து
கடமலைக்குண்டுவில் சாலை பள்ளத்தால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன.
கடமலைக்குண்டு கிராமத்தில் பஸ் நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேனி பிரதான சாலையின் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் கட்டப்பட்டது. சாக்கடை பாலம் கட்டி முடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த சில மாதங்களிலேயே தார் சாலை சேதமடைந்து சாக்கடை வடிகால் பாலம் அருகே பள்ளம் ஏற்பட்டது. இதனை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சாலையில் தற்போது பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சாலை பள்ளத்தில் இறங்கி மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் மற்றும் 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து இந்த இடத்தில் விபத்துக்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர்கள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் குச்சியில் சிவப்பு துணியை கட்டி சாலை பள்ளம் அருகே வைத்துள்ளனர். எனவே பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்பு சாலை பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.