காலிங்கராயன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு


காலிங்கராயன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
x

காலிங்கராயன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றாா்.

ஈரோடு

பவானி

காலிங்கராயன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றாா்.

மூதாட்டி

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி உமா சாந்தி. இவர் கவுந்தப்பாடி புதூரில் உள்ள நடுநிலை பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (வயது 94) என்பவரும் வசித்து வருகிறார்.

ராஜா தன்னுடைய மனைவி உமா சாந்தியை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவதற்காக தினமும் மோட்டார்சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று மனைவியை அழைத்து வருவதற்காக ராஜா சென்றுவிட்டார்.

நகை பறிப்பு

இதனால் வீட்டில் குஞ்சம்மாள் தனியாக இருந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த குஞ்சம்மாளின் அழுகுரல் சத்தம் கேட்டது. அழுகுரல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது படுகாயம் அடைந்த நிலையில் குஞ்சம்மாள் மயங்கி நிலையில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் ராஜா வந்து தனது தாயை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பரபரப்பு

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், 'வீட்டில் தனியாக இருந்த குஞ்சம்மாளை மா்ம நபர் நோட்டமிட்டு உள்ளார். பின்னர் அவரிடம் முகவரி கேட்பது போல் அந்த மர்ம நபர் சென்று உள்ளார். அப்போது யாரும் எதிர்பாரத வகையில் குஞ்சம்மாளை, மர்ம நபர் தாக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தபோது, குஞ்சம்மாமள் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியது,' தெரியவந்தது.

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம் காலிங்கராயன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story