கரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.28 சதவீதம் பேர் தேர்ச்சி


கரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.28 சதவீதம் பேர் தேர்ச்சி
x

கரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரூர்

பொதுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு மே மாதம் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. காலை 10 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கரூர் மாவட்டத்தில் 105 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 395 மாணவர்கள், 5 ஆயிரத்து 652 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 47 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

87.28 சதவீதம்

இதில் 4 ஆயிரத்து 350 மாணவர்கள், 5 ஆயிரத்து 292 மாணவிகள் என 9 ஆயிரத்து 642 பேர் தேர்ச்சி பெற்றனர். கரூர் மாவட்டத்தில் 87.28 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 80.63 சதவீதமும், மாணவிகள் 93.63 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 79.23 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.86 சதவீத தேர்ச்சியும் தனியார் பள்ளிகளில் 99.34 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டத்தில் 89 மாற்றுத்திறனாளிகள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டும், மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்டனர். கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்ததை மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.

குறுஞ்செய்தி

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் கடந்த 2017-ம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதல் இடம், 2-ம் இடம், 3-ம் இடம் என அறிவிக்கப்படுவதில்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கு தனித்தனியாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இணையத்தளத்திலும் தங்களது பொதுத்தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை பார்த்தனர்.


Next Story