கரூரில், தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்-கார் கொள்ளை: 3 திருநங்கைகள் கைது


கரூரில், தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்-கார் கொள்ளை: 3 திருநங்கைகள் கைது
x

கரூரில் தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் காரை கொள்ளையடித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கத்திமுனையில்...

திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப் பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 39). இவர் அந்த பகுதியில் தேங்காய் மட்டை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் காளிமுத்து சொந்த வேலை காரணமாக சேலம், சங்ககிரி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்தபோது திருநங்கைகள் சிலர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி ரூ.7 லட்சம் மதிப்புள்ள அவரது காரையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.

3 திருநங்கைகள் கைது

இதுகுறித்து காளிமுத்து கரூர் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப் பதிவு செய்தார். பின்னர் சந்தேகத்தின்பேரில் சில திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், காளிமுத்துவிடம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்றவர்கள் கரூரை சேர்ந்த தினேஷ் என்கிற நேத்ரா (20), அருண் என்கிற மாயா ஸ்ரீ (29), கந்தவேல் முருகன் என்கிற ரோகிணி (26) ஆகிய திருநங்கைகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து காரை மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகுந்தன், கூமா என்கிற மணி, மற்றொரு மணி ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story