கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!
கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கரூர்,
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திமுக தொண்டர்களில் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையில் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுவினர் அங்கே திரண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.