கோவில்பட்டி நகரில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
கோவில்பட்டி நகரில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் ரோடு கோர்ட் வளாகம், வணிக வரி அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், குடியிருப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்புள்ள இடங்களில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள பொருட்களை தூக்கிச் செல்வதும், வியாபாரிகளையும் பொதுமக்களையும் கடித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் சாலைகள், தெருக்களில் தனியாக நடமாட பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர்.
நேற்று தலைமை தபால் நிலையத்தில் காய்கறி, பழங்களை பெண் ஒருவர் மொபட்டில் வைத்துவிட்டு, தபால் நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள் பொருட்களை குரங்குகள் தூக்கி சென்று விட்டன. இதே போல இரவு நேரங்களில் தெருவோர கடைகளில் பழங்கள், காய்கறிகளை தார்ப்பாய், பெட்டிகளில் வைத்து கட்டிவைத்து செல்லும் பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.