கும்பகோணத்தில், தாமதமாக தொடங்கிய சம்பா சாகுபடி


கும்பகோணத்தில், தாமதமாக தொடங்கிய சம்பா சாகுபடி
x

சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியை தாமதமாக தொடங்கியுள்ளனர். தற்போது விவசாயிகள் பாய்நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியை தாமதமாக தொடங்கியுள்ளனர். தற்போது விவசாயிகள் பாய்நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை திறப்பு

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும். இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் ஆறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. மழையை நம்பி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. போதிய தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் தற்போது தாமதமாக தொடங்கி உள்ளனர்.

பாய் நாற்றங்கால்

கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வயிலில் எரு அடிப்பது, வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.கும்பகோணத்தை அடுத்த ஏரகரம், அசூர், இனாம் அசூர், திருப்புறம்பியம், மாதவபுரம் உள்ளிட்ட இடங்களில் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் வயல்களை உழுது தயார் செய்து வருகிறார்கள். நாற்றுகள் பறிக்கும் பணி, நடவுப்பணிகளில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நடவு பணிகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும், தேவையான இடங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த காலம் மழை பெய்ய கூடிய காலம் ஆகும். இந்த சமயத்தில் மழை பெய்து வயல்கள் முழுவதும் சேறாக காட்சி அளிக்கும். ஆனால் தற்போது பெய்யக்கூடிய மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் தாமதமாக நடுவு பணியை தொடங்கியுள்ளோம்.

நடவு பணிகள் தாமதமாக தொடங்கியதால் அதன் அறுவடையும் தாமதம் ஆகும். இது அடுத்த பருவ சாகுபடியிலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஆண்டு தோறும் இலக்கை தாண்டி சாகுபடி செய்து வந்தோம். இந்த ஆண்டு இலக்கை தாண்டுவோமா? என்ற அச்சம் உள்ளது. சம்பா சாகுபடிக்கான உரம், பூச்சிகொல்லிகள் போதி இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யவேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story