குன்றத்தூரில் ஒரே நாளில் 3 கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு


குன்றத்தூரில் ஒரே நாளில் 3 கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு
x

குன்றத்தூரில் ஒரே நாளில் 3 கோவில்களின் உண்டியலை உடைத்து திருடப்பட்டது.

காஞ்சிபுரம்

திருட்டு

குன்றத்தூர் அடுத்த நத்தம், திருநீர்மலை செல்லும் சாலையில் ஸ்ரீதேவி காத்தியாயினி அம்மன், மந்தைவெளி அம்மன், கங்கை அம்மன் உள்ளிட்ட 3 அம்மன் கோவில்களும் ஒரே வளாகத்தில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சாமி தரிசனம் முடிந்த பிறகு கோவிலின் நடை சாத்தப்பட்டது நேற்று காலை வழக்கம் போல கோவிலின் நடையை திறக்க வந்து பார்த்தபோது கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடப்பதை கண்டு கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொள்ளை நடந்த கோவிலில் ஆய்வு செய்தனர். இதில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றுள்ளனர். சில்லரை காசுகளை அப்படியே விட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் முடிந்த பிறகு கோவிலில் காணிக்கை எண்ணப்படும் என்றும் கடந்த ஆண்டு எண்ணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முடிந்த பிறகு காணிக்கை எண்ணுவதாக இருந்ததாக தெரிவித்தனர். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் 2 கோவில்களில் குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், கெலடிபேட்டை பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது உண்டியலில் இருந்த பணத்தை திருடி கொண்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

அதே போல் குன்றத்தூர் புது வட்டாரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் உண்டியல் பூட்டை உடைக்க முயன்ற போது சத்தம் கேட்டு அங்கு இருந்த காவலாளி வருவதை அறிந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அனைத்து கோவில்களிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்கள் என்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல் பூட்டு உடைத்து பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story