மதுக்கூரில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கால்நடை ஆஸ்பத்திரியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மதுக்கூரில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கூர்:
கால்நடை ஆஸ்பத்திரியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மதுக்கூரில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை ஆஸ்பத்திரி
மதுக்கூர் வடக்கு பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகம் ஆகியவை 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மோகூர், அன்டமி, புலவஞ்சி, கருப்பூர், படப்பைக்காடு, சிராங்குடி, வேப்பங்குளம், கண்டியங்காடு, மூத்தாகுறிச்சி, மன்னாங்காடு, விக்ரமம், வாடியக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை, இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து செல்கின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த கால்நடை ஆஸ்பத்திரியை மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மதுக்கூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மோகூர் கிராமத்தில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கூர் வடக்கில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியின் வடிகால் பகுதியான மோகூர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்தால் மழை நேரங்களில் கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.எனவே மதுக்கூர் வடக்கில் இயங்கி வரும் கால்நடை ஆஸ்பத்திரியை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோரிக்கை மனு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை துறை, கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.