மந்தாரக்குப்பத்தில் என்எல்சியை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி.யை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக, அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிலத்தை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மந்தாரக்குப்பத்தில் சுரங்கம் 2- முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கங்கைகொண்டான் பேரூராட்சியின் பேரூர் செயலாளர் மனோகரன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் சி.வி. சண்முகம் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிரந்தர தீர்வு
ஆர்ப்பாட்டத்தின் போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலத்தை கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் மக்கள் மேடைகளில் இந்த பகுதி மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்.எல்.சி.க்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு சம் அளவிலான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
கோடிக்கணக்கான வருவாய் லாபம் ஈட்டக்கூடிய என்.எல்.சி. நிறுவனத்தின் சொத்தில் பாதியை கேட்கவில்லை. சம இழப்பீடு தொகை, அனைவருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்றுதான் கேட்கிறோம், இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழக அரசை கண்டித்தும் பேசினார்.
தொடர்ந்து சி.வி.சண்முகம் எம்.பி. பேசுகையில், என்.எல்.சி. நிறுவனம் இந்த பகுதி மக்களை ஏமாற்றி வருகிறது. இங்குள்ள நிறுவனத்தின் தலைவர், மேல் அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் செய்ய போகிறார். எனவே நாம், மத்தியில் உள்ள நிலக்கரித்துறை மந்திரி, தலைமை பொறுப்பில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அதிகாரிகளை கண்டித்து செயல்பட வேண்டும்.
காவி துண்டும், கருப்பு துண்டும்
நாம் குடியிருந்த வீடு, விவசாய நிலத்தை இழந்து அனாதையாக நிற்கின்றோம். ஆனால் இதுவரை இந்த நிறுவனம் இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நேரடியாக இங்கு வந்து நிலத்தை எடுக்க முடியாது, மாநில அரசு மூலமாகத்தான் எடுக்க முடியும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசு மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
மத்திய அரசுக்கு துணை போகும், மு.க.ஸ்டாலினை எதிர்க்க வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும்கட்சியாக இருக்கும் போது வேறுவிதமாகவும் பேசி வருகிறார்.
காவி துண்டும், கருப்பு துண்டும் ஒன்றுதான். இருவர்களும் வேறுபாடு இல்லாதவர்கள். தற்போது என்.எல்.சி.யில் உள்ள 11 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களில் 1800 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் வடமாநிலத்தவர். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம், பீகாரில் உள்ள ஒரு மாவட்டமாக மாறிக்கொண்டுள்ளது.
இந்தியாவிலே பொறியாளர்கள் அதிகம் படித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் இருக்கின்றது இவர்களுக்கு ஏன் இந்நிறுவனத்தில் வேலை கொடுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது என்றார் அவர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்விராமஜெயம், சிவசுப்பிரமணியன், முருகுமாறன் கலைச்செல்வன் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன் நன்றி உரையாற்றினார்.