மங்கலதேவி கண்ணகி கோவிலில்சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம் :திரளான பக்தர்கள் தரிசனம்


மங்கலதேவி கண்ணகி கோவிலில்சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றம் :திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:45 PM GMT)

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தேனி

கண்ணகி கோவில்

தமிழக-கேரள எல்லையில் கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான பளியன்குடியிருப்புக்கு மேலே மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதை மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். கால மாற்றத்தால் இந்த கோவில் தற்போது பழுதடைந்து சிதைந்த நிலையில் காட்சி அளித்து வருகிறது.

தமிழக-கேரள எல்லையின் மலை உச்சியில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதியின் செழுமையையும், முல்லைப்பெரியாறு அணையின் எழில்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம். இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்வார்கள். ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது ஆண்டுேதாறும் சித்ரா பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

கொடியேற்றம்

அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி முழு நிலவு விழா வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பளியன்குடியிருப்பில் நேற்று காலையில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி ஏற்றப்பட்டது. மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கூடலூர்-கம்பம் கண்ணகி கோவில் அறக்கட்டளை குழு தலைவர் ராஜேந்திரன், கூடலூர் வனச்சரகர் முரளிதரன், வனவர் பூவதி, லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story