மயிலாடுதுறையில், மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடந்த மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.
புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி மயிலாடுதுறையில் நடந்த மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம், தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.
இந்த ஊர்வலத்துக்கு நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமை தாங்கினார். நகர சபை தலைவர் செல்வராஜ் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாணவ-மாணவிகள் பங்கேற்பு
இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை பூமிக்கு பகை, குப்பைகளை எரிப்பதை உடன் தவிர்ப்போம் பூமித்தாயை காப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம், பசுமை உலகம் படைப்போம், காற்று மாசை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய படி சென்றனர்.மேலும், பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், துணிகள் போன்றவைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
நுரையீரல் பாதிப்பு
பொதுஇடங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதை தவிர்த்திடவும், திடக்கழிவுகளை எரிப்பதன் மூலம் சுவாசக் கோளாறுகள் நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
புகையால் வளிமண்டலம் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.