மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்களுக்காக கட்டிய கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு


மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்களுக்காக கட்டிய கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு
x

மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்கள் அமைக்க கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

மெட்ரோ ரெயில் பணி

சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இடையேயான செம்மொழி சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலையின் நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. திடீரென அந்த இரும்பு கம்பிகள் சாலையை நோக்கி சாய்ந்தன. நல்லவேளையாக அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போக்குவரத்து துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஸ்ரீதர், ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ராட்சத கிரேனை வரவழைத்து சாய்ந்த நிலையில் இருந்த மெட்ரோ ெரயில் தூண்களுக்கான இரும்பு கம்பிகளை 4 மணி நேரத்தில் முழுமையாக அகற்றி சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள், தூண்கள் அமைக்க கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் எதனால் சாய்ந்தன? என விசாரித்து வருகின்றனர்.


Next Story