அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அண்ணாமலை


அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அண்ணாமலை
x

அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டுக்கு தமிழக மாணவர்கள் பெருமை தேடி தந்திருக்கிறார்கள். முதல் 10 இடத்தில் 4 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

எனவே நீட் விவாதத்தை இந்த ஆண்டுடன் நிறுத்திவிடுவோம். மறுபடியும் இதுபற்றி பேசுவது எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு உதாரணமாக மாணவர்கள் நமக்கு பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

பணப்பரிவர்த்தனைகள்

அமலாக்கத்துறையினர் தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தனர். அமைச்சரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆளுங்கட்சி தரப்பிலும், அகில இந்திய கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, மெக்கானிக், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் செந்தில்பாலாஜி உள்பட 4 பேர் குற்றவாளிகளாக கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் செந்தில்பாலாஜி அயல்நாடுகளுக்கு சில பணப்பரிவர்த்தனைகள் செய்திருக்கிறார் என்றும், அதுதொடர்பாக ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அமலாக்கத்துறை ஏன் வந்தது?

அதன் பிறகுதான் அமலாக்கத்துறை இந்த விசாரணைக்குள் வருகிறது. பண பரிவர்த்தனை மோசடி தடுப்புச்சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்கிறது. இது எந்தவிதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சிகளின் அரசியல் தலைவர்களும் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. குற்றவாளியாக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சென்று பார்த்து இருக்கிறார். சட்டம்-ஒழுங்கு பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?.

காழ்ப்புணர்ச்சி இல்லை

இந்த வழக்கில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. அமலாக்கத்துறை சுதந்திரமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும் விசாரணையை கையில் எடுத்திருக்கிறார்கள். யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை அரசியல் கருத்துகளாகத்தான் பார்க்கிறோம்.

கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இந்த அளவுக்கு தி.மு.க.வின் வேகத்தை பார்க்கவில்லை. இவ்வளவு பேர் அவரை சென்று பார்த்தார்களா? என்பது சந்தேகம்தான். அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வின் கருவூலமாக மாறிவிட்டார் என்று மக்கள் சொல்கிறார்கள். இப்போது அவரை பற்றி விசாரிக்க முதல்-அமைச்சர், அமைச்சர்கள் செல்வது அதை ஊர்ஜிதம் செய்வதுபோல் இருக்கிறது.

புரையோடிய ஊழல்

நான் ஜெயலலிதா பற்றி பேசியதை அ.தி.மு.க.வினர் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். ஊழலை எதிர்த்து நான் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் 2 முறை விசாரணை அமைப்புகள் (வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை) சென்று இருக்கிறது. இது வேறெங்கும் நடக்கவில்லை. அந்த அளவுக்கு ஊழல் புரையோடி போய்க்கொண்டிருக்கிறது. ஊழலால் தமிழ்நாடு இனி தாங்காது.

சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 25 இடங்களை பிடிக்கவேண்டும் என்று சொன்னார். நாங்கள் புதுச்சேரியையும் சேர்த்து 40 எம்.பி. இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்தோம். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்ததால், அமித்ஷாவை அவர் சந்திக்க முடியவில்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தலைவர்கள் உறுதி செய்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story