மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்; கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்


மொடக்குறிச்சியில்  தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்; கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்
x

மொடக்குறிச்சியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார். இதனால் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார். இதனால் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்டர்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 10 கவுன்சிலர்கள் தி.மு.க.விலும், 2 கவுன்சிலர்கள் பா.ஜ.க.விலும், 3 கவுன்சிலர்கள் அ.தி.மு.க.விலும் உள்ளனர். இதில் பேரூராட்சியின் தலைவராக மொடக்குறிச்சி தி.மு.க. பேரூர் செயலாளரும், மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணன் மனைவி செல்வாம்பாள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் மொடக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடு புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மொடக்குறிச்சி பேரூர் பா.ஜ.க. சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக வாசகம் இடம்பெற்று இருந்தது.

பா.ஜ.க. நிர்வாகி மீது புகார்

கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க. கவுன்சிலர்கள் பேரூராட்சியில் தொடர் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டிவந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் பேரூராட்சியை கண்டித்து அவதூறாக போஸ்டர் ஒட்டியதாக கூறி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று பா.ஜ.க. கவுன்சிலர் சத்யாவின் கணவரும், பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதி மேம்பாட்டு மாவட்ட தலைவருமான சிவசங்கர் மீது புகார் அளித்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தாக்குதல்

இதனிடையே ஆலங்காட்டுவலசு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் அகற்ற முயன்றனர். இதுபற்றி அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகி சிவசங்கர் அங்கு வந்தார். இதனால் அங்கு அவருக்கும், தி.மு.க. தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் வாய்த்தகராறு முற்றி அது கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர்.

இதில் சிவசங்கருக்கு முகம், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிவசங்கர் மற்றும் அவரது தரப்பினர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையம் சென்று, சிவசங்கரை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என புகார் அளித்தனர். மேலும் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யவேண்டும் என்று தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

முற்றுகை

இதனால் போலீஸ் நிலையம் பகுதியில் தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இரு தரப்பினரிடம் இருந்தும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன்அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதலில் காயம் அடைந்த சிவசங்கர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் குவிப்பு

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில், டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தி.மு.க., பாஜ.க.வினர் மோதல் சம்பவம் மொடக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story