முத்தையாபுரத்தில் ஒரேநாளில்ஜவுளிக்கடை, நகைப்பட்டறையைஉடைத்து பணம், நகைகள் திருட்டு


முத்தையாபுரத்தில் ஒரேநாளில் ஜவுளிக்கடை, நகைப்பட்டறையை உடைத்து பணம், நகைகள் திருடிய மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரத்தில் ஒரேநாள் இரவில் ஜவுளிக்கடை, நகைப்பட்டறையை உடைத்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ஜவுளிக்கடையில் திருட்டு

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இவர், அப்பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவர் கடை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள்ள சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.87 ஆயிரம் மதிப்பிலான ரெடிமேட் துணி வகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இக்கடையில் பணம், துணி வகைகளை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

நகைப்பட்டறை

இப்பகுதி அருகிலுள்ள முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த கோபால் மகன் ராமசாமி (வயது 40). இவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் வணிக வளாகத்தில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் ராமசாமியின் தந்தை கோபால் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். பதறிப்போன ராமசாமியும் கடைக்கு வந்துள்ளார். இருவரும் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பட்டறையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இருசம்பவமும் அருகருகே நடந்துள்ளதால், ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மர்ம கும்பலை முத்தையாபுரம் போலீசார் ேதடிவருகின்றனர்.


Next Story