நாகையில், சி.ஐ.டி.யூ.வினர் நடைபயண பிரசாரம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், சி.ஐ.டி.யூ.வினர் நடைபயண பிரசாரம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. சார்பில் வடசென்னை, திருவள்ளூர், கோவை, குமரி, கடலூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய 7 முனைகளிலிருந்து புறப்பட்டு, சுமார் 2 ஆயிரத்து 100 கி.மீட்டர் நடைப்பயண பிரசாரத்தை சி.ஐ.டி.யூ. தொடங்கி உள்ளது. வருகிற 30-ந் தேதி திருச்சியில் மிகப்பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலூரிலிருந்து சி.ஐ.டி.யூ. துணை பொதுச்செயலாளர் திருச்செல்வம் தலைமையில், மாநில செயலாளர் ஜெயபால் முன்னிலையில், நாகை மாவட்ட சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மற்றும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட நடை பயண குழுவினர் நேற்று முன்தினம் இரவு நாகை மாவட்ட எல்லைப்பகுதியான நாகூருக்கு வந்தனர். அவர்களை நாகை நகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ராணி, செயலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு சங்கத்தினரும் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடைபயணத்தின் நோக்கம் குறித்தும் பேசினர். இதில் திரளான சி.ஐ.டி.யூ.வினர் கலந்துகொண்டனர்.