நாகையில், இஞ்சி விலை எகிறியது


நாகையில், இஞ்சி விலை எகிறியது
x
தினத்தந்தி 15 July 2023 7:00 PM GMT (Updated: 15 July 2023 7:01 PM GMT)

நாகையில் தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி விலை எகிறியதால் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகையில் தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து இஞ்சி விலை எகிறியதால் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விண்ணை தொட்ட தக்காளி விலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை சதத்தை கடந்து இரட்டை சதத்தை நோக்கி வீறு நடை போட்டு வருவதால், ஏழை, எளிய மக்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் தாக்காளி, சின்ன வெங்காத்தை தொடர்ந்து இஞ்சி விலை எகிறி உள்ளது. இஞ்சி இல்லாமல் அசைவ உணவு வகைகளை சமைப்பது கடினம். அந்த அளவுக்கு சமையலுக்கு இஞ்சி அத்தியாவசிய தேவையாக உள்ளது. டீ கடைகளில் சமோசா, வடை போன்றவற்றை தயாரிக்கவும் இஞ்சி பயன்படுகிறது.

அருமருந்து

அதேபோல செரிமான பிரச்சினைக்கு இஞ்சி அருமருந்து என்பதால், இஞ்சியை அனைத்து வீடுகளிலும் இருப்பு வைத்திருப்பார்கள். நாகை மார்க்கெட்டில் இஞ்சி குறைந்த அளவே வருகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த மாதம் கிலோ ரூ.120-க்கு விற்ற இஞ்சி கடந்த 2 நாட்களாக ரூ.300-க்கு விற்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் 100 கிராம் இஞ்சி ரூ.35-க்கு விற்கிறது.

வாங்கும் அளவை குறைத்து விட்டனர்

மற்ற காய்கறிகளை போல இஞ்சி விலையும் எகிறி இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக காய்கறிகள் வாங்கும் அளவை இல்லத்தரசிகள் குறைத்துக் கொண்டே செல்கின்றனர். காய்கறி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்னும் ஒரு மாதங்களுக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும். அதன்பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி அதன் வரத்து அதிகரிக்கும் போது விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story