நாகையில், கனவா மீன் வரத்து அதிகரிப்பு


நாகையில், கனவா மீன் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 6:46 PM GMT)

சீசன் தொடங்கியதால் நாகை துறைமுகத்திற்கு கனவா மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்


சீசன் தொடங்கியதால் நாகை துறைமுகத்திற்கு கனவா மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கனவாமீன் சீசன்

சீசன் தொடங்கி விட்டதால் நாகை விசைப்படகு மீனவர்களின் வலைகளில் அதிக அளவில் கனவா மீன்கள் சிக்குகிறது. ஓடு கனவா, ஊசி கனவா, ஆக்டோபஸ் கனவா என்ற ரகங்களில் நாகை துறைமுகத்திற்கு வந்து இறங்குகிறது. இதில் ஓடு கனவா மீன்கள் அதிக அளவில் கிடைக்கிறது.

2 கிலோ வரை எடை கொண்ட இந்த ஓடு கனவா மீன்களை பாக்ஸ்களில் போட்டு, விசைப்படகில் இருந்து தள்ளுவண்டி மூலம் ஏல கூடத்திற்கு தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

அரபு நாடுகளில் வரவேற்பு

அங்கு ஒரு கிலோ ஓடு கனவா ரூ.480-க்கும், ஆக்டோபஸ் கனவா ரூ.270-க்கும், ஊசி கனவா ரூ.250-க்கும் ஏலம் போனது. இந்த வகை கனவா மீன்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அரபு நாடுகளில் இந்த மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கனவா சீசன் தொடங்கி விட்டதால் வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த மீன்களின் வரத்து இருக்கும் என்று நாகை மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிக விலை

கனவா மீன்களை தவிர மற்ற மீன்களின் வரத்து குறைந்ததாலும், கேரளா மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி விட்டதாலும், நாகையில் மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.

அதன்படி ஒரு கிலோ புள்ளி நண்டு, இறால் ஆகியவை ரூ.500-க்கும், வஞ்சிரம் ரூ.800-க்கும், வாவல் ரூ.1300-க்கும் நாகை துறைமுகத்தில் நேற்று விற்பனையானது. அதேபோல அனைத்து வகை மீன்களின் விலையும் ரூ.50-க்கு மேல் விலை உயர்ந்தே காணப்பட்டது.


Next Story