நாகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


நாகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டத் துணை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். உண்ணாவிரத போராட்டத்தை மாநிலத் தலைவர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Next Story