நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
நாகையில், ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் நாகையில் ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சை
நாகை அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சீதா(வயது 42). இவர், கீழ்வேளூர் அருகே ஆவராணி மற்றும் பனைமேடு ஆகிய இடங்களில் உள்ள பகுதிநேர ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சீதா திடீரென பினாயிலை குடித்து மயங்கி விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது:-
தற்காலிக பணி நீக்கம்
நான் கீழ்வேளூர் அருகே ஆவராணி மற்றும் பனைமேடு ஆகிய இடங்களில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணியாற்றி வந்தேன்.
நேற்று காலை கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது உங்களை கடந்த 31-ந் தேதி முதல் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம். அதனால் நீங்கள் இனி பணிக்கு வர வேண்டாம்.
பணிநீக்க ஆணையை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். இதனால் மனமுடைந்து பினாயிலை குடித்தேன் என சீதா கூறினார்.
பண இருப்பு குறைப்பு
கீழ்வேளூர் மற்றும் பனைமேடு பகுதி நேர ரேஷன் கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் கடைகளில் பண இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் இங்கு வேலைபார்த்த சீதாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளோம் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.