நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்
விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாகை தலைமை தபால் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் பாஸ்கர், மாநில குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம், ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாகை சி.எஸ்.ஐ. பள்ளி திடலில் இருந்து ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தமிழகத்தில் இந்தியை திணிக்கக்கூடாது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.