நாகர்கோவிலில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்தது; 35 பேர் காயம்
நாகர்கோவிலில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்தனர்.
வயலில் பாய்ந்த பஸ்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தாழக்குடியில் இருந்து நேற்று மதியம் 3 மணி அளவில் அரசு பஸ் தேரூர் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை மார்த்தாண்டத்தை சேர்ந்த டிரைவர் கிரீசன் தம்பி ஓட்டினார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ் புத்தேரி குளத்தை ஒட்டிய சாலையில் வந்த போது, எதிரே ஒரு டெம்போ தாறுமாறாக வந்ததாக தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த டிரைவர் கிரீசன் தம்பி உடனே பஸ்சை நிறுத்த பிரேக் போட்டுள்ளார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் உள்ள வயலில் பாய்ந்து இரு முறை உருண்டு நின்றது.
பயணிகள் அலறல்
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டனர். உடனே அப்பகுதி மக்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் தகவல் அறிந்து வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். அப்போது சில பயணிகள் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டனர்.
பஸ்சில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உடனே ஆம்புலன்ஸ் மூலம் ஆங்காங்கே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
35 பேர் காயம்
அதன்படி வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும், பூதப்பாண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 13 பேரும் சேர்க்கப்பட்டனர்.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கீழ புத்தேரியை சோ்ந்த புஷ்பம் (வயது 72), ஈஸ்வரி (63), பகவதியம்மாள் (60), இசக்கியம்மாள் (50), முத்துலட்சுமி (25), அனிதா (60), தாழக்குடியை சேர்ந்த சரஸ்வதி (53), சுசீந்திரத்தை சேர்ந்த தாமோதரன் (62), மேல புத்தேரியை ேசர்ந்த வள்ளி (43), ஷகிலா (55), வீரலெட்சுமி, அளத்தங்கரையை ேசர்ந்த முகேஷ் (12), காளான் கரையை சேர்ந்த இசக்கியம்மாள் (53), தருண் (4), தெரிசனங்கோப்பை சேர்ந்த பவித்ரா (23) மற்றும் மீனாட்சி (49) ஆகிய 16 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 35 பேர் காயமடைந்தனர்.
திரண்டனர்
இதற்கிடையே வயலுக்குள் பாய்ந்த பஸ்சை கிரேன் மூலமாக மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. விபத்து நடந்த இடத்தின் மறுபுறம் புத்தேரி பெரியகுளம் உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராத விதமாக வயலில் பாயாமல் குளத்துக்குள் பாய்ந்து இருந்தால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற விபரீத சம்பவம் நடக்கவில்லை. அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்து 35 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேயர்
இதற்கிடையே காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். முன்னதாக விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டார். இதே போல எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
---