நாகையில், விவசாயிகள் வெளிநடப்பு
நாகையில் விவசாயிகள் வெளிநடப்பு
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண் துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்ட ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேகதாவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-
காவிரி பாசன விவசாய சங்க தலைவர் சிவஞானம்: கரியாப்பட்டினம் ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும். ஈர வாய்க்கால், மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் வடிகால்கள் அமைக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சாகுபடிக்கு கடன் வழங்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர்: பாங்கல் வீரசோழன் வாய்க்காலின் குறுக்கே விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறிய பாலம் அமைத்து தர வேண்டும். பனங்காடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள வேளாண்மை அலுவலகத்தை உடனே திறக்க வேண்டும்.
முறைவைக்காமல் தண்ணீர்
கடைமடை விவசாய சங்க தலைவர் தமிழ்ச்செல்வன்: குறுவை சாகுபடிக்காக முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க கூட்டுறவு சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய சங்க தலைவர் சரபோஜி: இந்த ஆண்டு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பச்சைபயிறு, உளுந்து ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். நெல் குவின்டாலுக்கு 3 ஆயிரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.