நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின் போது ராட்சத குழாயில் உடைப்பு


நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின் போது ராட்சத குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின் போது ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தார்சாலைகளை பெயர்த்து எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நெல்லிக்குப்பம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு பூமிக்கு கீழ் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்தது.இதனால் தண்ணீர் பூமிக்கடியில் இருந்து குபு,குபுவென கொப்பளித்தபட வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது.

பின்னர் இதுபற்றி அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் இது போன்ற பணிகள் நடைபெறும் போது உரிய முறையில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கடிதம் அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொண்டதால் குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டு வருவதால் கலெக்டரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என எச்சரித்தார். இதையடுத்து நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில் கமிஷனர் பார்த்தசாரதி மேற்பார்வையில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது.


Next Story