ஊட்டியில் தாவரவியல் பூங்கா புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணிகள் தீவிரம்
தொடர் மழையை ஒட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி
தொடர் மழையை ஒட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தாவரவியல் பூங்கா
சர்வதேச சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வார நாட்களில் சுமார் 10,000 பேரும் வார விடுமுறை நாட்களில் சுமார் 20,000 பேரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு ஆகிவிட்டதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை விழா சிறப்பாக நடந்தது. இதனால் கடந்த ஆண்டை விட சுமார் 1½ லட்சம் சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக வந்தனர். இதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு கூடுதல் கட்டணம் வசூலானது.
புல்வெளியில் யூரியா தூவும் பணி
இவ்வாறு சுற்றுலாப் பணிகள் கூடுதலாக வந்ததாலும் தாவரவியல் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டதாலும் புல்வெளிகள் பாதிக்கப்பட்டு பல இடங்களில் புற்கள் காணாமல் போய்விட்டது. இதனால் எப்போதும் பச்சை பசேல் என்று காணப்படும் புல்வெளி தற்போது களை இழந்து காணப்படுகின்றது. இதனால் தற்போது வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி புல்வெளிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையிலும் நைட்ரஜன் தேவைக்காகவும் யூரியா உரம் தூவும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அடுத்த ஒரு சில வாரங்களில் பூங்கா புல்வெளி மீண்டும் பச்சை பசேல் என மாறிவிடும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.